சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
பண் - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/19 Thiruchathagam Thiruvasagam.mp3
8.147   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/47 Thiruvenba Thiruvasagam.mp3
8.148   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/48 Pandaaya Naanmara Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.119   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன்
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்,
செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல்,
எம் பெருமான், தேவர் பிரான்,' என்று.

[1]
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும்
நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு
அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும்,
தென் பாண்டி நாடே, தெளி.

[2]
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப்
பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்.

[3]
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர்
ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்!
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும்
ஆனந்தம் காண், உடையான் ஆறு.

[4]
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன்
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண், ஆய்ந்து.

[5]
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே!
ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும்
தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பண் ஏத்து இசைப்ப,
வான் புரவி ஊரும், மகிழ்ந்து.

[6]
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன்,
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்
கழுக்கடை காண், கைக்கொள் படை.

[7]
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன்
முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்,
பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும்,
பரு மிக்க நாதப் பறை.

[8]
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்,
தாளி அறுகு ஆம், உவந்த தார்.

[9]
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும்
கோது இலா ஏறு ஆம், கொடி.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.147   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.

[1]
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?

[2]
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

[3]
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

[4]
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்;
பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது
இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.

[5]
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்;
மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்
மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.

[6]
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.

[7]
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.

[8]
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.

[9]
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.

[10]
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து,
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆகக் கொண்டான், உவந்து.

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.148   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

[1]
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன்
வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த,
கருவும் கெடும், பிறவிக் காடு.

[2]
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்;
நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி,
அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம்,
மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.

[3]
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும்,
தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.

[4]
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல,
எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனை, காண்.

[5]
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,
பேணும் அடியார் பிறப்பு அகல, காணும்
பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும்
பிரியானை, வாய் ஆரப் பேசு.

[6]
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த
மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி,
பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து.

[7]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list